மகளிர் தினம்: மூன்று பெண்கள் உடல் தானம் செய்ய ஒப்புதல்
By DIN | Published On : 08th March 2019 07:42 AM | Last Updated : 08th March 2019 07:42 AM | அ+அ அ- |

கோவை அரசுக் கல்லூரி மருத்துவமனையில், கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை இருப்பிட மருத்துவ அலுவலர் செளந்தரவேலிடம் வியாழக் கிழமை வழங்கினர்.
கோவை, குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் அமுதா ரவிகுமார் (42). மாதம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தா அனந்தராமன் (60). கஞ்சிக்கோட்டைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (38). இவர்கள் மூவரும், தாங்கள் இறந்த பின் தங்களது உடலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக அளிப்பதற்கான ஒப்புதலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் செளந்தரவேலிடம் அளித்துள்ளனர்.
இது குறித்து இவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் உடல் தானத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளோம். இறந்த பின் மண்ணுக்குள் வீணாகும் உடலை, பிறர் வாழ்வுக்காக அர்ப்பணிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.