வங்கிகளில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பணம் மோசடி

வங்கிகளில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த பெண் உள்பட நால்வரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

வங்கிகளில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த பெண் உள்பட நால்வரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை கணபதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (37), மீனா (26), ரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் (32), பிரவீன் (28). உறவினர்களான இவர்கள் நால்வரும் கோவையில் உள்ள ஒரு வங்கியில் வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். அதற்கான ஆவணங்கள் மற்றும் இடத்தின் நகல், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் அந்த வங்கியும் அவர்களுக்கு ரூ.40 லட்சம் கடன் வழங்கியது. இவர்கள் இந்தக் கடனுக்கான தவணையை ஒரு சில மாதங்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர். இதையடுத்து கடனை திருப்பிச் செலுத்தாததால் அவர்களது ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானவை எனத் தெரியவந்தது. 
 இதுகுறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த போலீஸார், சம்பந்தப்பட்ட நபர்கள் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இவர்கள் நால்வரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் நால்வரும் இதேபோல போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மேலும் 6 வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதன்மூலம் அவர்கள் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து குற்றப் பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறுகையில், நான்கு பேரும் கோவையில் உள்ள 7 பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் மற்றவர்களின் நிலங்களை தங்களது நிலம் போல காட்டி மோசடி செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com