10 லட்சம் பட்டுப்புழு முட்டைகள் உற்பத்தி செய்ய திட்டம்: பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தகவல்
By DIN | Published On : 16th May 2019 08:17 AM | Last Updated : 16th May 2019 08:17 AM | அ+அ அ- |

கோவை பட்டுப்புழு முட்டைகள் உற்பத்தி மையத்தில் நடப்பாண்டு 10 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவிநாசி, அன்னூர், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 2,600 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பட்டுக்கூடுகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 7 லட்சம் கிலோ வரை பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறன. இதனால், ஆண்டுக்கு 8 லட்சம் வரை பட்டுப்புழு முட்டைகள் தேவையுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பட்டுக்கூடுகள் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பட்டுப்புழு முட்டைகள் கோவை பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உள்ள முட்டைகள் உற்பத்தி மையம் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 10 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் ஆண்டுதோறும் பட்டுக்கூடுகளின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பட்டுப்புழு முட்டைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 5 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3.16 பட்டுப்புழு முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 10 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் விதைக்கூடுகள் உற்பத்தியை பொருத்தே பட்டுப்புழு முட்டைகள் உற்பத்தியும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விதைக்கூடுகள் உற்பத்தியை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.