டெக்ஸ்மோ கோப்பை மாநில கைப்பந்துப் போட்டி: முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி வெற்றி

டெக்ஸ்மோ கோப்பைக்காக மாநில அளவிலான 51ஆவது கைப்பந்துப் போட்டிகள் பெரியநாயக்கன்பாளையத்தில்

டெக்ஸ்மோ கோப்பைக்காக மாநில அளவிலான 51ஆவது கைப்பந்துப் போட்டிகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை தொடங்கின. முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
கோவை அக்வா குரூப் நிறுவனங்களின் நிறுவனரும், கைப்பந்து வீரருமான ஆர்.ராமசாமி நினைவாக அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகள் புதன்கிழமை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கின்றன. இதில் தமிழகத்தின் முக்கிய அணிகளான இந்தியன் வங்கி, அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சுங்கத் துறை, வருமான வரித் துறை அணிகள் கலந்து விளையாடுகின்றன.
தொடக்க நிகழ்ச்சிக்கு அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார்.அக்வா குழும நிறுவனங்களின் உதவித் தலைவர் வேலுசாமி தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை சுங்கத் துறை அணியும் மோதின. 
இதில் இந்தியன் வங்கி அணி 25-21, 25-13, 25-23 என்ற புள்ளிகளுடன் 3-0 என்ற நேர்செட்டில் சுங்கத் துறை அணியை வீழ்த்தியது.
இரண்டாவது ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், அக்வா ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின.விறுவிறுப்பாக நீண்டநேரம் நடந்த இதில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி 25-20, 21-25, 25-20, 25-21 என்ற புள்ளிகளுடன் 3-1 என்ற செட் கணக்கில் அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியைத் தோற்கடித்தது. 
அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்குகின்றன. இதில் தேவராயபுரம் நண்பர்கள் கைப்பந்து அணி, மூக்கனூர் நேதாஜி கைப்பந்து அணி, கோட்டூர் மலையாண்டிப் பட்டினம் சக்தி கைப்பந்து அணி, மாதவராயபுரம் மதன் நினைவு கைப்பந்து அணி, இருகூர் டைனமோ கைப்பந்து அணி, கோவை காட்டன்சிட்டி கைப்பந்து அணி, தாளியூர் எஸ்.எஸ்.எஸ். கைப்பந்து அணி, பொள்ளாச்சி ரெட் ஸ்டார் கைப்பந்து அணி, தீனம்பாளையம் நண்பர்கள் கைப்பந்து அணி, கவுண்டம்பாளையம் யங் ஸ்டார் கைப்பந்து அணி, நரசிம்மநாயக்கன்பாளையம் சீனு ஸ்போர்ட் கிளப் அணி, வரதராஜபுரம் டி.என்.ஜி.ஆர் கைப்பந்து அணி, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி கைப்பந்து அணி ஆகிய அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com