சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: குடிநீர்த் தட்டுப்பாடு  ஏற்படும் அபாயம்

கோவை மாநகரின் பிரதான நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து

கோவை மாநகரின் பிரதான நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து வருவதால் கோடை  மழை கைகொடுத்தால் மட்டுமே குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 
கோவையின் பிரதான நீராதாரமாக  சிறுவாணி அணை விளங்குகிறது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.  கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 46 வார்டுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களுக்கு குடிநீராக சிறுவாணி நீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்கு தினமும் சராசரியாக 10 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 
ஆனால், கடந்த மாத இறுதியில் 875.40 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீர் மட்டம் 872.50 மீட்டராக சரியத் தொடங்கியதால், 7 கோடி லிட்டருக்கு குறைவான தண்ணீர் மட்டுமே மக்களுக்கு விநியோகிக்க எடுக்கப்பட்டது. கடந்த வாரத்தில்  அணையின் நீர்மட்டம் மேலும், 6.91 மீட்டர் குறைந்து, 865.59 மீட்டராக இருந்தது. 
நீர்மட்டம் சரிவால், அணையில் இருந்து நீர் எடுக்கும் அளவு 6 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது அணையின்  நீர்மட்டம் 864.40 மீட்டராக உள்ளதால் அணையில் உள்ள 4 வால்வுகளில் 3 வால்வுகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்து, குடிநீர் விநியோகமும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழை மற்றும் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் சிறுவாணி அணையில் கொள்ளளவு அதிகரித்துக் காணப்பட்டது. மக்களுக்கு விநியோகிக்கப் போதுமான அளவு தண்ணீரும் இருந்தது. ஆனால், இந்தாண்டு, மே மாதத் தொடக்கத்தில்  நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை சரியாகப் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் மளமளவெனக் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும். அதன் மூலம் குடிநீர்த்  தட்டுப்பாடு அபாயம் நீங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):
கோவை விமான நிலையம் 7.3, சூலூர் 16.3, பொள்ளாச்சி 14, கோவை (தெற்கு) 16, பெரியநாயக்கன்பாளையம் 7, வேளாண்மைப் பல்கலைக்கழகம் 13.5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com