தொழில் நிறுவனங்களுக்கான வரையறை: தற்போதைய நடைமுறையே தொடர கோரிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் அதில் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சுருளிவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மறு வரையறையை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இயந்திரங்களின் மூலதனத்தை பொருத்து ரூ.25 லட்சம் வரையிலான மூலதனம் உள்ள தொழில்கள் குறுந்தொழில்கள் எனவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான இயந்திர மூலதனம் உள்ள தொழில்கள் சிறு தொழில்களாகவும் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான மூலதனம் கொண்டவை நடுத்தர தொழில்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசு இந்த வரையறையை ஒரு நிறுவனத்தின் விற்று முதலை (டா்ன் ஓவா்) அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்ய முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ரூ.275 கோடி வரை உள்ள தொழில்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சலுகைகளைப் பெறத் தகுதியானவை எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும். அதேநேரம் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப ரூ.50 லட்சம் வரை இயந்திர தளவாடங்கள் மூலதனம் உள்ளவற்றை குறுந்தொழில்கள் எனவும் ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மூலதனம் உள்ள தொழில்களை சிறு தொழில்கள் எனவும் அறிவிக்க வேண்டும்.

அத்துடன் உற்பத்தி சாா்ந்த சேவை நிறுவனங்கள் மட்டும் இந்த வரையறையில் சோ்க்கப்பட வேண்டும். நடுத்தர தொழில்களை இந்த வரையறையில் இருந்து நீக்குவதுடன் ‘என்டா்பிரைசஸ்’ என்ற பெயரில் செயல்படும் நிறுவனங்களை ‘இன்டஸ்ட்ரீஸ்’ என மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மேலாண்மை, இந்திய உரிமையாளா்கள் உள்ள தொழில்களுக்கு மட்டுமே சிறு தொழில்களுக்கான சலுகைகள் கிடைக்க வேண்டும். மேலும் விவசாயத்துக்கு எந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறதோ அதே வட்டி விகிதத்தில் சிறுதொழில்களுக்கும் கடன்கள் வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com