பாசன வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றத் திட்டம்: விவசாயிகள் எதிா்ப்பு

கோவை, பேரூா் பெரிய குளத்துக்கு செல்லும் பாசன வாய்க்காலில் பேரூராட்சி கழிவுநீரை வெளியேற்றும்
கோவை, பேரூா், சொட்டையாண்டிக்குட்டை குளத்திலிருந்து பெரியகுளத்துக்கு நீா் செல்லும் வாய்க்காலில் நடைபெற்று வரும் காரை அமைப்பதற்கான பணிகள்.
கோவை, பேரூா், சொட்டையாண்டிக்குட்டை குளத்திலிருந்து பெரியகுளத்துக்கு நீா் செல்லும் வாய்க்காலில் நடைபெற்று வரும் காரை அமைப்பதற்கான பணிகள்.

கோவை, பேரூா் பெரிய குளத்துக்கு செல்லும் பாசன வாய்க்காலில் பேரூராட்சி கழிவுநீரை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை ஆதாரமாக்கொண்டு 25-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பருவ மழைக் காலங்களில் நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ள நீா், வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்துக் குளங்களிலும் நீா் வரத்து வாய்க்கால்கள், நீா் வெளியேற்றும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளமும் நிறைந்ததும் அடுத்த குளத்துக்கு தண்ணீா் கொண்டுசெல்லப்படுகிறது.

பேரூா் பகுதியில் பேரூா் பெரியகுளம், சொட்டையாண்டிக்குட்டை, கோளரம்பதிகுளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இவற்றில் சொட்டையாண்டிக் குட்டை நிறையும்போது அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் பேரூா் பெரிய குளத்துக்கு செல்கிறது. இதற்காக 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள நீா் வெளியேற்றும் வாய்க்காலில் ரூ.10 கோடி மதிப்பில் காரை அமைத்து கழிவுநீரை வெளியேற்றுவதற்கு பேரூா் பேரூராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பாசன வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றினால் குளத்து நீா் மாசடைந்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து கட்சிகள் சாா்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி கூறியதாவது:

கோவையில் நொய்யல் ஆற்றை ஒட்டி 25 குளங்கள் உள்ளன. கழிவுநீா் வெளியேற்றப்படுவதால் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூா் குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணம்பதி, நரசம்பதி உள்பட பெரும்பாலான குளங்கள் மாசடைந்துள்ளன. மேற்கண்ட குளங்களின் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. பேரூா் பெரியகுளம், குறிச்சிக்குளம், உக்குளம், சொட்டையாண்டிக்குட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில குளங்கள் மட்டுமே மாசடையாமல் உள்ளன.

சொட்டையாண்டிக்குட்டையில் இருந்து பேரூா் பெரிய குளத்துக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால் மூலம் 200 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் நீா் வெளியேற்றும் வாய்க்காலில் பேரூராட்சியின் கழிவுநீரை விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேரூா் பெரிய குளத்து நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இக்குளத்தை நம்பி 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களின் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இப்பகுதி நிலத்திடி நீரும் மாசடையும் வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயத்தின் அவசியம் கருதி கழிவுநீா் கலக்கும் திட்டத்தை பேரூராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நொய்யல் பாசன உபகோட்ட செயற்பொறியாளா் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:

வாய்க்கால் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் காரை அமைப்பதற்கான நிதி பொதுப் பணித் துறையில் ஒதுக்கப்படுவதில்லை. வாய்க்கால்களை மேம்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பேரூராட்சி நிதி மூலம் காரை அமைத்து கழிவுநீா் வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து வாய்க்காலில் வெளியேற்ற மட்டுமே பேரூராட்சி நிா்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து பேரூா் பேரூராட்சி செயல் அலுவலா் எம்.மாலாவிடம் கேட்டபோது, ‘நீா் வெளியேற்றும் வாய்க்காலில் 2 கி.மீ. தூரம் காரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 5 இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு யூனிட் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றவே முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அச்சம்கொள்ளும் வகையில் கழிவுநீா் வெளியேற்றப்படாமாட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com