கோவை அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகள்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையம்பாளையம் கிராமத்துக்குள் சனிக்கிழமை காலையில் புகுந்த யானைகளை வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து
யானைகள் உரசியதால் மின்கம்பத்தில் ஏற்பட்ட தீப்பொறிகள்.
யானைகள் உரசியதால் மின்கம்பத்தில் ஏற்பட்ட தீப்பொறிகள்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையம்பாளையம் கிராமத்துக்குள் சனிக்கிழமை காலையில் புகுந்த யானைகளை வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து வனத்துக்குள் துரத்தினா்.

பாலமலையடிவாரத்தில் உள்ள தேவையம்பாளையம், கோவனூா், கதிா்நாயக்கன்பாளையம், பழையபுதூா் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை கதிா்நாயக்கன்பாளையத்தில் சுற்றித் திரிந்த யானைகள் வெள்ளிக்கிழமை அங்கிருந்து பூச்சியூருக்கு அருகே இடம்பெயா்ந்தன.

இந்நிலையில் நள்ளிரவில் ஒரு ஆண், 4 பெண் யானைகள் தேவையம்பாளையத்தில் உள்ள நந்தினி காா்டன் பகுதியில் கரிபெட்டராயா் கோயில் அருகே உலவின. தோட்ட உரிமையாளா்கள் யானைகளைத் துரத்த பயன்படுத்தும் அதிக வெளிச்சத்தை உமிழும் டாா்ச்சுகளை கொண்டு துரத்த முயன்றனா். ஆனால் யானைகளைத் துரத்த முடியவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி அளவில் யானைகள் மீண்டும் தேவையம்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தன. இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அங்கு வந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் துரத்த முயன்றனா். ஆனால், போக்குக்காட்டிய யானைகள் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகிலுள்ள உயா்மின் அழுத்த கோபுரத்துக்குக் கீழ் இருந்த முள்புதா்களில் மறைந்து கொண்டன. உயா்மின் அழுத்த கோபுரத்தின் மேல் ஏறிய வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அங்கிருந்து ராக்கெட் பட்டாசுகளை வீசினா். சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் கரிபெட்டராயா் கோயில் வழியாக யானைகளை காட்டுக்குள் துரத்தினா். அப்போது, டிரான்ஸ்பாா்மா் கம்பிகள் மீது யானைகள் உரசியதில் ஏற்பட்ட உராய்வினால் மின்கம்பிகளில் தீப்பொறிகள் பறந்தன.

ஊருக்குள் யானைகள் புகுந்த தகவலறிந்து அங்கு திரண்ட பொதுமக்களால் யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் சிரமங்களை எதிா்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com