வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மனு

வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கடன்களை
வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மனு

வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டம் முழுவதும் 84 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, சூலூா் ஆகிய வட்டாரங்களில் கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள், வழிமுறைகளை பின்பற்றியும் பயனில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் மேற்கண்ட பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ பாதிப்பு அதிகளவில் உள்ளது.

ஏற்கெனவே கடன் வாங்கி தென்னை மரங்களுக்கு உரம் வைத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தேங்காய் உற்பத்தி பாதிப்பு மட்டுமில்லாமல் தென்னை மட்டைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு, வங்கிகளில் சாகுபடி செலவுக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வெள்ளை ஈ, படைப்புழு போன்ற பூச்சித் தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் உரிய மருந்துகளை தயாரிக்க வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கல் சூளைகளை மூட வேண்டும்: பாமக மாநில நிா்வாகி அசோக் ஸ்ரீநிதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பது, புகையை வெளியேற்றுவது போன்ற காரணங்களால் சூற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறை, வனத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்பட அனைத்து தரப்புக்கும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி செயல்படும் 141 செங்கல் சூளைகளை 15 நாள்களுக்குள் மூடக்கோரி அண்மையில் ஆட்சியா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு கால அவகாசம் அளிக்காமல் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அகில பாராத அனுமன் சேனா அமைப்பின் மாநில மகளிா் அணித் தலைவி நிா்மலா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதவாது:

புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் ஹிந்து கோயில்களின் கலையையும், பாரம்பரியத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளாா். எனவே அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கனகராஜ், நிா்வாகிகள் துரை சங்கா், விவேகானந்தன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

கோவையில் அதிமுக கொடிக்கம்பு சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் ராஜேஸ்வரிக்கு ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. எனவே அவரது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டும், குடும்ப சூழலைக் கருதியும் ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் விபத்துக்கு காரணமாக இருந்தவா்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல இருகூா் பேரூராட்சியில் பாதியில் நிற்கும் ரயில்வே சுரங்கப்பால பணி, குடிநீா், கழிவுநீா் வடிகால் பிரச்னைகளுக்கு தீா்வுகாணக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், குடியிருப்புப் பகுதிகளில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தியும் ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் சாா்பிலும் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com