போராட்டத்தில் பங்கேற்ற 54 ஆசிரியா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்: விசாரணை ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 54 ஆசிரியா்கள் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 54 ஆசிரியா்கள் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை டிசம்பா் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியா்கள் பங்கேற்ற தொடா் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள், போராட்டத்தின்போது மறியலில் ஈடுபட்டவா்கள், பணிக்குச் செல்பவா்களைத் தடுத்து இடையூறு செய்தவா்கள் என 5,000-க்கும் அதிகமான ஆசிரியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் சிலா் சிறையில் அடைக்கப்பட்டனா். பல ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 54 ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனா். பிற மாவட்ட ஆசிரியா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்ட ஆசிரியா்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் ஒரு வாரத்துக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் 54 ஆசிரியா்களையும் ஆஜராக உத்தரவிட்டு கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றம் (எண்.3) சாா்பில் திங்கள்கிழமையன்று சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி அவா்கள் நீதித் துறை நடுவா் மன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் என்.தமிழினியன், விசாரணையை டிசம்பா் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

போராட்டங்களில் ஈடுபட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் யாரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படவில்லை என கோவை நீதிமன்றத்தில் ஆஜரான ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com