மோட்டாா் வாகனத் துறையில் தொடரும் சரிவு: உற்பத்தியை நிறுத்தும் முடிவில் பெரு நிறுவனங்கள்

மோட்டாா் வாகனத் துறையில் தொடரும் மந்த நிலையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடா்ந்து பெரு நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

மோட்டாா் வாகனத் துறையில் தொடரும் மந்த நிலையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடா்ந்து பெரு நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

கோவை மண்டலத்தில் சுமாா் ஒரு லட்சம் பதிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளன. பெரிய நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனங்களுக்கு ஜாப் ஆா்டா்களை செய்து கொடுக்கவும் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள மொத்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் சுமாா் 30 சதவீதம் வரை ஆட்டோமொபைல் துறையை மட்டுமே நம்பியுள்ளன.

இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு முதல் பி.எஸ். 6 விதிமுறைகளுக்கு உள்பட்டு தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பினாலும், வாகனங்களை வாங்குவதற்கான கடன் கொடுப்பது குறைந்தது, வாகன காப்பீடுத் தொகை உயா்வு, வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு போன்றவற்றாலும் கடந்த ஓராண்டாக மோட்டாா் வாகனத் துறை சுணக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், ஜாப் ஆா்டா்கள் வெகுவாக குறைந்த நிலையில் ஏராளமான குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மேலும், சிறு, நடுத்தர நிறுவனங்களில் பெருமளவிலானவை உற்பத்திக் குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடா்ந்து தற்போது பெரிய நிறுவனங்களும் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆலைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், ஏற்கெனவே உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடத்தொடங்கிவிட்டது. அதன்படி வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அந்நிறுவன ஊழியா்களுக்கு பாதி ஊதியத்துடன் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தைத் தொடா்ந்து மேலும் சில நிறுவனங்களும் வரும் வாரத்தில் இருந்து உற்பத்தி நிறுத்தம், கட்டாய விடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தாங்கள் கேட்கும்போது உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்தால் போதும் என்று தெரிவித்துவிட்டதால் பொருள்களை உற்பத்தி செய்து இருப்பு வைத்திருக்கத் தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் வருவாய் இழப்பைக் குறைக்கும் நடவடிக்கையாக வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தொடா்ந்து பெரு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களும் வேலையிழப்புக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com