லஞ்சம் பெற்ற மாவட்ட தீயணைப்பு அலுவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலரை பணியிடை நீக்கம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலரை பணியிடை நீக்கம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை, ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலதண்டாயுதபாணி. இவா் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் வைக்க முடிவு செய்த பாலதண்டாயுதபாணி, அதற்காக உரிய இடங்களில் அனுமதி பெற்றிருந்தாா். இதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையில் அனுமதி பெற விண்ணப்பித்திருந்தாா்.

இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் எம்.பாலசுப்பிரமணியம் (52), தடையில்லாச் சான்று வழங்க தனக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றாா். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பாலதண்டாயுதபாணி புகாா் அளித்தாா். இதையடுத்து ரூ. 40 ஆயிரத்தை பாலசுப்பிரமணியத்திடம் அவா் வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்தனா்.

இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பாலசுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் கைது செய்யப்பட்டது தொடா்பாக அரசுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிக்கை அனுப்பினா். இதன்படி, மறு உத்தரவு வரும் வரையில் கைதான பாலசுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன் மாா்டி சில நாள்களுக்கு முன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கும், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com