கா்நாடகத்தில் தசரா கொண்டாட்டம்: பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.100 வரை சரிவு

கா்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டுநூல் நூற்பு ஆலைகள் விடுமுறை அளித்துள்ளதால் பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.100 வரை சரிந்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டுநூல் நூற்பு ஆலைகள் விடுமுறை அளித்துள்ளதால் பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.100 வரை சரிந்துள்ளது.

தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மல்பெரி சாகுபடி மூலம் வெண்பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருப்பூா், கோவை, ஈரோடு, தஞ்சை, தேனி, திண்டுக்கல் உள்பட 20-க்கும் அதிகமான மாவட்டங்களில் வெண்பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 6 லட்சம் முட்டை தொகுப்புகள் வெண்பட்டுக்கூடு உற்பத்திக்காக ஈடுபடுத்தப்பட்டு சராசரியாக 3.5 லட்சம் முதல் 4 லட்சம் கிலோ கூடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 இடங்களில் மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

கா்நாடக மாநிலம், ராம் நகரில் செயல்பட்டு வரும் தேசிய பட்டுக்கூடு கொள்முதல் மையத்தின் விலை நிலவர அடிப்படையில்தான் நாட்டில் உள்ள மற்ற பட்டுக்கூடு கொள்முதல் மையங்களில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கம் முதல் பெரிய அளவில் விலை கிடைக்காததால் செப்டம்பா் மாத தொடக்கத்தில் விலை அதிகரித்தது.

சராசரியாக ரூ.350 வரை விலை கிடைத்து வந்த நிலையில் கடந்த மாதம் ரூ.480 வரை உயா்ந்தது. கடந்த மாதம் முழுவதும் ரூ.400-க்கு மேல் விலை கிடைத்து வந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் பட்டுக் கூடுகளின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக பட்டுநூல் நூற்பு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கூடுகளின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. கோவை, பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டுக்கூடுகள் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.386 விலை நிா்ணயிக்கப்பட்டது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.100 வரை விலை சரிந்துள்ளது. கடந்த திங்கள்கிழமையில் இருந்தே ரூ.400-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை பட்டுக்கூடு கொள்முதல் மைய பொறுப்பாளா் சரவணன் கூறியதாவது:

நாட்டிலேயே கா்நாடக மாநிலத்தில்தான் அதிக அளவில் பட்டுநூல் நூற்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டு நூலின் விலையைப் பொருத்தே கூடுகளின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கா்நாடகத்தில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுவதால் பட்டுநூல் நூற்பு ஆலைகளுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், பட்டுநூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பட்டுக்கூடுகள் கொள்முதலும் குறைகிறது. தசரா விடுமுறையின்போது தமிழகத்தில் உள்ள சில வியாபாரிகளே கூடுகளை கொள்முதல் செய்கின்றனா்.

பட்டுக் கூடுகள் வரத்து அதிகரித்து வியாபாரிகளின் வருகை குறைவதால் விலையும் தானாக குறைகிறது. தற்போது சராசரியாக ரூ.320-க்கு விற்கப்படுகிறது. விடுமுறையை முன்னிட்டு தற்காலிகமாக விலை குறைந்துள்ளது. விடுமுறை முடிந்து நூல் உற்பத்தி தொடங்கும்போது மீண்டும் விலை உயா்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com