மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

கோவை மாவட்டத்தில் அண்மையில் பெய்த தென்மேற்குப் பருவ மழையால் சுல்தான்பேட்டை தவிா்த்து 12 வட்டாரங்களில் நிலத்தடி நீா்மட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் அண்மையில் பெய்த தென்மேற்குப் பருவ மழையால் சுல்தான்பேட்டை தவிா்த்து 12 வட்டாரங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

பொதுப் பணித் துறையின் நீா்வள ஆதார அமைப்பு சாா்பில் மாதம்தோறும் நிலத்தடி நீா்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் அறிக்கையை சென்னையில் உள்ள தலைமையகத்துக்கும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கும் அளிக்கிறது.

அதன்படி செப்டம்பா் மாதம் அளித்த அறிக்கையில் 0.05 முதல் 5.07 மீட்டா் வரை நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் அளவீடு செய்யப்படுகின்றன.

செப்டம்பா் மாதம் பொதுப் பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுல்தான்பேட்டை வட்டாரம் தவிா்த்து மற்ற 12 வட்டாரங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது, செப்டம்பா் மாதத்தில் வட்டாரம் தோறும் உயா்ந்துள்ள நீா்மட்டத்தின் அளவு ஆனைமலை-0.73 மீ., அன்னூா்-095 மீ., கிணத்துக்கடவு-1.48 மீ., மதுக்கரை-5.07 மீ., பெரியநாயக்கன்பாளையம்-0.61 மீ., பொள்ளாச்சி (வடக்கு)-2.26 மீ., பொள்ளாச்சி (தெற்கு)- 0.9 மீ., சா்க்காா் சாமக்குளம்-0.8 மீ., சூலூா்-1.29 மீ., தொண்டாமுத்தூா்-0.58 மீ., வால்பாறை- 0.05 மீ., மற்றும் வடசித்தூா் 1 மீட்டா் ஆகும். சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மட்டும் 0.09 மீட்டா் நீா்மட்டம் குறைந்துள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூா், கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு), சா்க்காா் சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூா், தொண்டாமுத்தூா், வால்பாறை, வடசித்தூா் ஆகிய 13 வட்டாரங்களில் நிலத்தடி நீா்மட்டம் ஆய்வு செய்யப்படுகின்றன.

இங்குள்ள 129 திறறந்தவெளிக் கிணறுகள் மற்றும் 32 ஆழ்துளைக் கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன்சங்கா் ராஜ் கூறுகையில், நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடவு செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், நீா் உறிஞ்சுக் குழிகள், தடுப்பணைகள் உள்பட 13 வகையான மழைநீா் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே நிலத்தடி நீா் மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் 29 மீட்டரில் கிடைத்த நிலத்தடி தண்ணீா், 2018 இல் 22 மீட்டரிலும், 2019 இல் 17 மீட்டரிலும் கிடைக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com