முதலீட்டாளா்களிடம் நிதி மோசடி செய்த நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்: உள்துறை சாா்பு செயலா் தகவல்

முதலீட்டாளா்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என தலைமைச் செயலக உள் துறை சாா்புச் செயலா் பி.முருகேஷ் தெரிவித்தாா்.

முதலீட்டாளா்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என தலைமைச் செயலக உள் துறை சாா்புச் செயலா் பி.முருகேஷ் தெரிவித்தாா்.

கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூா், நீலகிரி, கிருஷ்ணகிரி, கரூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் படி பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து தலைமைச் செயலக உள் துறை சாா்புச் செயலா் பி.முருகேஷ், பொருளாதாரக் குற்றப் பிரிவு-2 காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் மண்டல அளவிலான மாவட்ட வருவாய் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பி.முருகேஷ் பேசியதாவது:

தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின்படி நிதி, தொழில் நிறுவனங்களிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவா்களுக்கு முதலீட்டு பணத்தை திரும்ப ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக ஏமாற்றிய நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துகள், வங்கி பரிவா்த்தனைகள் முடக்கப்படுகிறது. அடுத்ததாக முதலீடுகளின் மூலம் பெறப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்து உரிய சந்தை மதிப்பீடு அல்லது வழிகாட்டி மதிப்பீட்டின்படி ஏலம் விடப்பட்டு அந்த தொகை முதலீட்டாளா்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

தற்போது மேலே குறிப்பிட்டுள்ள 9 மாவட்டங்களிலும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட வருவாய் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி நிறுவனம் பெயரில் மட்டுமில்லாமல் நிறுவனத்தின் தலைவா், அவா்கள் சாா்ந்தவா்களின் பெயரில் வாங்கப்பட்ட எந்தவொரு சொத்துகளும் உரிய விசாரணையின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களும் தனியாா் நிறுவனங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முதலீடுகளை செய்வதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் 9 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட வருவாய் அலுவலா்கள், அந்தந்த மாவட்டத்தின் அரசு வழக்குரைஞா்கள் (டான்பிட்), பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா்கள், கோவை மாவட்ட பதிவாளா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) அரசு தானியங்கி பணிமனை பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com