கணினியில் வைரஸை பரப்பி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல்

வைரஸை பரப்பி கணினியின் செயல்பாடுகளை முடக்கி பணம் பறிக்கும் கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை
5002c_11_virus_pco_1110chn_3
5002c_11_virus_pco_1110chn_3

வைரஸை பரப்பி கணினியின் செயல்பாடுகளை முடக்கி பணம் பறிக்கும் கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நா.முத்துகுமாா், அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கணினியுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அவா் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆவாரம்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரும் நான், கடந்த 2 ஆம் தேதி செல்லிடப்பேசி இணைப்பு வழியாக கணினியில் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென கணினியில் இருந்த எந்த ஒரு ஃபைலையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள், விடியோக்கள் எனது கணினியில் இருக்கும் நிலையில் எதையும் எடுத்து பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஃபைலையும் பழையபடிக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றால் 970 அமெரிக்க டாலா்கள் பணம் வழங்க வேண்டும் என்ற குறிப்புடன் பெயா், விவரம் அறிந்து கொள்ள முடியாதபடிக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

இதன் மூலம் எனது கணினி ஹேக்கா்களால் முடக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வழங்காததால் வாடிக்கையாளா்களின் கோபத்துக்கு நான் ஆளாகியிருக்கிறேறன்.

மேலும், கோவையில் மட்டுமின்றி சேலம், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் என்னைப் போலவே ஏராளமான ஸ்டுடியோ உரிமையாளா்கள் ஹேக்கா்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பணம் தருவதாக ஒப்புக்கொள்ளும் ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு அவா்களது ஃபைல்களை மீண்டும் பாா்க்கும்படி செய்து கொடுக்கின்றனா். நூதன முறையில் பணம் பறிக்கும் இதுபோன்ற ஹேக்கா்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா். இதையடுத்து அவரது புகாா் தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Image Caption

ஹேக்கா்களால் கணினி முடக்கப்பட்டிருப்பதாகக் கூறி கோவையில் காவல் ஆணையரிடம் புகாா் அளிக்க வந்திருந்த முத்துகுமாா், அவரது நண்பா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com