தேங்காய் மட்டை கொள்முதல் விலை குறைப்பு: விவசாயிகள் கவலை

தென்னை நார் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து தேங்காய் மட்டை கொள்முதல் விலையை ஒரு லோடுக்கு

தென்னை நார் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து தேங்காய் மட்டை கொள்முதல் விலையை ஒரு லோடுக்கு ரூ.500 வரை குறைத்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளதால் கொப்பரை உற்பத்தி, தென்னை நார், கயிறு உள்பட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 
தேங்காய் மட்டைகளில் இருந்து பெறப்படும் தென்னை நார் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தேங்காய் மட்டைகளுக்கும் நல்ல விலை கிடைத்து வந்தது. தேங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டைகளுக்கும் சேர்த்தே விலை நிர்ணயிக்கின்றனர்.
இந்நிலையில், தென்னை நார் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து தேங்காய் மட்டைகளின் கொள்முதல் விலையை திடீரென குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு லோடுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தேங்காய் விலையும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.பரமசிவன் கூறியதாவது: 
மட்டைகளை அரைத்து அதிலிருந்து தென்னை நார், மஞ்சி, பித் ஆகிய பல்வேறு வகையான பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் தேங்காய் மட்டைகளுக்கான தேவைகள் அதிகரித்து சீரான விலையும் கிடைத்து வந்தது. 
இந்நிலையில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருள்கள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் தென்னை நார் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து தேங்காய் மட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
1,000 தேங்காய் மட்டைகள் அடங்கிய ஒரு லோடு ரூ.1800 முதல் 1900க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இனி ரூ.1,200க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். தென்னை நார் பொருள்களின் ஏற்றுமதி சரிந்துள்ளதால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தென்னை நார் ஏற்றுமதியில் உள்ள பிரச்னைகளுக்கு தென்னை நார் வாரியத்தின் மூலமே தீர்வு காண வேண்டும். இதனைத் தவிர்த்து மட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 
மட்டை கொள்முதல் விலை குறைப்பு, தேங்காய் கொள்முதலில் எதிரொலிக்கும். இதனால், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளே பாதிக்கப்படுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com