காலமானார்: சமூக ஆர்வலர் வெ.கி.ஜெகதீஷ்

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெ.கி.ஜெகதீஷ் (27) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெ.கி.ஜெகதீஷ் (27) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
கோவை, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜக்கு என்கிற ஜெகதீஷ். சிறு வயதிலேயே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்துவிட்ட நிலையிலும் விடா முயற்சியால் பள்ளிப் படிப்பையும், சொந்த முயற்சியால் ஆங்கிலத்தையும் கற்றவர். இதைத் தொடர்ந்து கணினியில் பக்க வடிவமைப்பு தொழில்நுட்பத்தைப் பயின்ற இவர் இணையதள வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி வந்த இவர், இணையதளம் மூலம் கண்தானம், ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சென்னை பெருவெள்ளத்துக்காக கோவையில் இருந்து 70-க்கும் மேற்பட்ட லாரிகளில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்.
ஈழத் தமிழர்களுக்கான உண்ணாவிரதம், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர், பல்வேறு கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். "இணையமும் இவனும்' என்ற நூலை எழுதியுள்ளார். பல அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ள இவரை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோவை வந்திருந்தபோது அழைத்துப் பாராட்டியுள்ளார். 
கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் அவர் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெகதீஷின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com