நிலையத்துக்குள் செல்லாத பேருந்துகள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயக்கப்படும்

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் பெரும்பாலான பேருந்துகள் செல்லாமல் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம்  வடக்கு மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளைக் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். 
இதில், ஜூலை மாதம்  65 அரசு, தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்துகள் நிலையத்துக்குள் சென்று வர வேண்டும் என போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. அபராத நடவடிக்கைகளுக்குப் பயந்து பேருந்து ஓட்டுநர்கள் கடந்த மாதங்களில் நிலையத்துக்குள் சென்று வருவதைக் கடைப்பிடித்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரமாக தனியார் பேருந்துகள் நிலையத்துக்குள் செல்லாமல், மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகளை நிறுத்தி  பயணிகளை ஏற்றிச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பயணிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், " மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள், வழித்தடத்தில் முழுமையாக இயக்கப்படாத பேருந்துகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இதில் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின்  தணிக்கை நடவடிக்கையின் போது, தொடர்ந்து விதிமீறி இயக்கப்படும் பேருந்துகள் மாவட்ட  ஆட்சியரின் பரிந்துரையோடு பறிமுதல் செய்யப்படும். மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காமல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com