நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கு: ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குத் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது

நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குத் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
மதுக்கரை தாலுகா, பச்சாபாளையம், பாலத்துறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சண்முகம் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகத்துக்கு சொந்தமான 55 சென்ட் விவசாய நிலம் அரிசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் இறந்தததையடுத்து அந்த நிலத்தில் அவரது மகனும், மகளும் விவசாயம் செய்து வந்தனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு இந்நிலத்தை, நில உடைமை பதிவு மேம்பாட்டுத் திட்டத்தில் அரிசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சொந்தமானது என தவறாக பட்டா மாற்றப்பட்டது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அங்கு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது நிலம் எனக்கூறி அங்கு வேலி அமைத்துள்ளனர்.
இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து தங்களது பெயரில் பட்டாவை மீண்டும் மாற்றித் தரக்கோரி கோவை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2012இல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் உரிமையாளர்கள் பெயருக்கு பட்டாவை மாற்றித்தர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், பட்டாவை மாற்றித் தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நில உரிமையாளர்கள் சண்முகம், கவிதா ஆகியோர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உத்தரவை செயல்படுத்தாத ஆட்சியரின் கார், 10 கணினிகள், 10 பிரிண்டர் இயந்திரங்கள், 10 மேஜைகள், 10 நாற்காலிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக நீதிமன்ற ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். இந்நிலையில் மனுதாரர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களிடம் ஆட்சியரின் உதவியாளர்(பொது) ஒரு வார கால அவகாசம் கோரினார். அதன்பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com