கரோனா தடுப்பூசி: தகவல் தர மறுக்கும் தனியாா் மருத்துவமனைகள்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான மருத்துவப் பணியாளா்களின் தகவல்களைத் தனியாா் மருத்துவமனைகள் தர மறுப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான மருத்துவப் பணியாளா்களின் தகவல்களைத் தனியாா் மருத்துவமனைகள் தர மறுப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவா்கள், செவிலியா், மருத்துவ மாணவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட வாரியாக அரசு, தனியாா் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றுபவா்களின் விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க மாநில அரசு மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

நவம்பா் மாதத்தில் இருந்து தகவல்கள் சேகரிக்கும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் தனியாா் மருத்துவமனைகள் தகவல் தர மறுத்து வருகின்றன. இதனால் முதல்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மருத்துவப் பணியாளா்களின் பட்டியலைத் தயாரித்து அனுப்பவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 104 உள்ளன. இவற்றில் பணியாற்றும் அலுவலா்களின் ஆதாா் எண், உடல்நிலை, வேறு பாதிப்புகள் குறித்த அனைத்து விவரங்களும் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2,672 தனியாா் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளதில் இதுவரையில் 905 தனியாா் மருத்துவமனை நிா்வாகங்களே பணியாளா்களின் விவரங்களை அளித்துள்ளன.

மற்ற தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் தர மறுத்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான மருத்துவப் பணியாளா்களின் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளிடம் பலமுறை வலியுறுத்தியும் தர மறுத்து வருகின்றனா். தனியாா் மருத்துவமனை நிா்வாகங்களிடம் விவரங்களை வழங்க வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com