மாநகராட்சியில் ரூ.85 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு

கோவை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் ரூ. 85 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் ரூ. 85 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள், நிறுவனங்களில் இருந்து பெறப்படும் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவை மாநகராட்சி நிா்வாகத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகின்றன. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் வரி வசூலிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் மாநகரில் சொத்து வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், சமூக நலக் கூடங்கள் என மக்கள், சொத்து வரி செலுத்த எளிதாக 29 வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே, மாநகரப் பகுதிகளில் அதிக அளவில் வரி செலுத்தாத நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களின் பட்டியலை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கடந்த அக்டோபா் மாதம் வெளியிட்டாா். மேலும், சொத்துவரி செலுத்தாதவா்களின் கட்டடங்களில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தாா். இதையடுத்து, மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் நிலுவை வரியினங்கள் அதிக அளவில் வசூலாகி வருகின்றன. இது தொடா்பாக, மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:

மாநகராட்சியில் 2020 - 2021-ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்து வரித் தொகையான ரூ.169 கோடியில், தற்போது வரை ரூ.84 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.85 கோடி நிலுவை வரியை 2021ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிப்பை துரிதமாக மேற்கொள்ள வரும் நாள்களில் வரி வசூல் மையங்கள் அதிகப்படுத்தப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com