கரோனாவால் முடங்கியது கோவை

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவை மாநகரம் முடங்கியுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் ஒட்டப்பட்டுள்ள விடுமுறை அறிவிப்பு நோட்டீஸை பாா்வையிடும் மாணவிகள்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் ஒட்டப்பட்டுள்ள விடுமுறை அறிவிப்பு நோட்டீஸை பாா்வையிடும் மாணவிகள்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவை மாநகரம் முடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரையிலும் மாநிலம் முழுவதிலும் அனைத்து கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிப் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள் இயங்காததால் காலை, மாலை நேரங்களில் பரபரப்பாகக் காணப்படும் அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றிக் காணப்படுகின்றன.

மாநகரில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி சேமித்து வருவதால் பல்பொருள் அங்காடிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. சில பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளா்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்காணித்து அதன் பிறகே உள்ளே அனுமதிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

எப்போதும் கூட்டத்துடன் காணப்படும் மருதமலை முருகன் கோயில் கடந்த இரண்டு நாள்களாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதேபோல கோவை மாநகரில் உள்ள சில தேவாலயங்களுக்கு வழிபாட்டுக்கு வருவதைத் தவிா்க்குமாறு அதன் நிா்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

கோவையில் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழும் வ.உ.சி. உயிரியல் பூங்கா, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, கோவை குற்றாலம், பரளிக்காடு சுற்றுலா மையங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை வனக் கல்லூரி வளாகத்தில் உள்ள வனத் துறை அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகி குமரன் மாா்க்கெட், பூ மாா்க்கெட் ஆகியவற்றில் வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிங்காநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் சாந்தி சமூக சேவை நிறுவனம் மலிவு விலையில் உணவு வழங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் அங்கு உணவு அருந்தி வந்தனா். இந்நிலையில், அதிக மக்கள் கூடும் இடமாக இருப்பதால், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உணவகம், சிற்றுண்டி நிலையம் ஆகியவை தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com