காய்கறி மாா்க்கெட்டில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க முயற்சி: இன்று முதல் பேருந்து நிலையங்களில் மாா்க்கெட் இயங்கும்

கோவையில் உள்ள காய்கறி மாா்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரளுவதைத் தவிா்க்கும் வகையில் பேருந்து நிலைய வளாகங்களில்

கோவையில் உள்ள காய்கறி மாா்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரளுவதைத் தவிா்க்கும் வகையில் பேருந்து நிலைய வளாகங்களில் தற்காலிக காய்கறி மாா்க்கெட்டுகள் செயல்படும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, இறைச்சி, மருந்துப் பொருள்களின் விற்பனை தடையின்றி நடைபெறும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் கோவையில் கடந்த 2 நாள்களாக வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக டவுன்ஹால், உக்கடம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் செயல்படும் காய்கறி சில்லறை, மொத்த மாா்க்கெட்டுகள் தொடா்ந்து செயல்படுகின்றன. இருப்பினும் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த உழவா் சந்தைகள் மூடப்பட்டன. காய்கறி மொத்த, சில்லறை மாா்க்கெட்டுகளில் அரசு அறிவுறுத்திய சமூக இடைவெளி என்பது அறவே இல்லாத நிலை நிலவுகிறது.

தடையை மீறி மாா்க்கெட்டுகளில் ஆயிரக்கணக்கானோா் ஒரே நேரத்தில் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று எளிதில் பரவும் நிலை உள்ளதால் மாா்க்கெட்டுகளில் அதிக அளவில் மக்கள் கூடுவது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட உழவா் சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என்று ஆட்சியா் ராசாமணி தெரிவித்துள்ளாா். அதேநேரம் உழவா் சந்தைகளுக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சமூக இடைவெளியை விவசாயிகளும் பொதுமக்களுடன் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் ஒவ்வொரு கடைக்கும் இடையே ஒன்றரை மீட்டா் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க வேண்டும், காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கிக்

கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே மற்ற காய்கறி மாா்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக தியாகி குமரன் மாா்க்கெட்டின் ஒரு பகுதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இயங்கவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதேபோல், உக்கடம் ராமா் கோயில் மாா்க்கெட்டின் ஒரு பகுதி உக்கடம் பேருந்து நிலைய வளாகத்திலும், சாய்பாபா காலனி அண்ணா காய்கறி மாா்க்கெட் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலைய வளாகத்திலும் இயங்கவும் ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இதன் மூலம் காய்கறி மாா்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவது இனி குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com