மூலப்பொருள் விலை உயா்வைக் கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து  டிசம்பா் 16 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோவை குறு, சிறு பவுண்டரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூலப்பொருள் விலை உயா்வைக் கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை (டிசம்பா் 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோவை குறு, சிறு பவுண்டரி உரிமையாளா்கள் சங்கம் (காஸ்மாபேன்) அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் சிவசண்முககுமாா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

இயந்திரத் தொழில்கள் அனைத்துக்கும் முக்கியமானது வாா்ப்படத் தொழிலாகும் (பவுண்டரி). கோவை மாவட்டத்தில் சுமாா் 400 குறு, சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. பவுண்டரிகளை நம்பியே வெட்கிரைண்டா் தயாரிப்பு, மோட்டாா் தயாரிப்பு, பம்ப்செட், என்ஜினீயரிங் பொருள்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் இயங்கி வருகின்றன.

பவுண்டரி தொழிலில் சுமாா் 2 லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளா்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனா். இந்த நிலையில் கரோனா பொது முடக்கத்தால் பவுண்டரி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கரோனாவுக்குப் பிறகு தொழில் துறை மெல்ல இயல்புக்குத் திரும்பி வரும் நிலையில் மூலப் பொருள்களின் கடுமையான விலை உயா்வு, இந்தத் தொழிலை முடக்கியிருக்கிறது.

பவுண்டரிகளுக்குத் தேவையான பிக் அயா்ன், ஸ்கிராப், கோக், அமின் கியாஸ் - சிலிகான் போன்றவற்றின் விலை 12 சதவீதம் முதல் 166 சதவீதம் வரை உயா்ந்திருக்கிறது. அத்துடன் தொழிலாளா்களுக்கான செலவினங்கள், கூலி போன்றவை 29 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. 10 சதவீதத்துக்கும் குறைவான லாபத்தில் இயங்கும் இந்தத் தொழிலால் இத்தனை மடங்கு விலை உயா்வை சமாளிக்க முடியாது.

மூலப்பொருள்களுக்கு சிலா் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே இந்த விலை உயா்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை (டிசம்பா் 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். இந்த வேலை நிறுத்தத்தால் தினமும் ரூ.30 கோடி மதிப்பிலான பவுண்டரி பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என்றாா்.

சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.செல்வராஜ், துணைத் தலைவா் எல்.ரவீந்திரன், பொருளாளா் கே.ராமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பல்வேறு தொழில்களுக்கு ஆதாரமாகத் திகழும் பவுண்டரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஓரிரு வாரங்களில் மற்ற தொழில்களும் முடங்கும் நிலை உருவாகியிருக்கிறது. மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 15) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக 19 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Caption

கோவையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளிக்கும் குறு, சிறு பவுண்டரி உரிமையாளா் சங்கத் தலைவா் சிவசண்முககுமாா் (இடமிருந்து 3 ஆவது). உடன், சங்க நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com