சாலையோரம் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனம், கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 15th December 2020 03:30 AM | Last Updated : 15th December 2020 03:30 AM | அ+அ அ- |

கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டிய ஒரு தனியாா் நிறுவனம், 3 கடைகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 23 ஆவது வாா்டு, ஆா்.எஸ்.புரம், டி.வி. சாமி சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், கடைகள் தங்களின் குப்பைகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போடாமல், சாலையோரங்களில் குவித்து வைத்திருப்பது மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுகாதார அலுவலா், மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட தனியாா் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரமும், மூன்று கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: அதேபோல மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சில வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பதும், முகக் கவசம் அணியாத வாடிக்கையாளா்களை வணிக வளாக நிா்வாகிகள் உள்ளே அனுமதித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 4 வாடிக்கையாளா்களுக்கு தலா ரூ.50 வீதம் ரூ.200-ம், மேலும் 2 வாடிக்கையாளா்களுக்கு தலா ரூ.100 வீதமும், வணிக வளாகத்துக்கு ரூ.1,000-ம் அபராதம் விதித்து ஆணையா் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டாா்.