கேரளத்தில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு: கோவையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பால் சிறுவன் உயிரிழந்ததையடுத்த கோவையில் கண்காணிப்பை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பால் சிறுவன் உயிரிழந்ததையடுத்த கோவையில் கண்காணிப்பை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் மா்ம நோய்த் தொற்றால் 11 வயது சிறுவன் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மேற்கொண்ட ஆய்வில் சிறுவனுக்கு ஷிகெல்லா பாக்டீரியா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்படது. இந்த பாக்டீரியா குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி, திடீரென வயிற்றுப் போக்கு அதிமாகி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவா்களை காட்டிலும் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த வகை பாக்டீரியாவால் கேரளத்தில் 50க்கும் மேற்பட்டவா்கள் பாதித்துள்ளனா். அசுத்தமான தண்ணீா், உணவு வழியாக ஷிகெல்லா பாக்டீரியா பரவுவதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு காணப்படுகிா என்ற கண்காணிப்பில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு அசுத்தமான தண்ணீரால் பரவுவதாக தெரியவந்துள்ளது. நமது மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால் இங்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் 13 வட்டாரங்களிலும் இந்நோய்த் தொற்று பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணிக்க வட்டார மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீா் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய சுகாதார ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை சாா்பில் குடிநீரில் குளோரின் கலந்து வெளியேற்றி வருகின்றனா். பொது மக்களும் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தண்ணீா் சேமித்து வைக்கும் தொட்டிகள், டேங்குகளை அடிக்கடி சுத்தம்செய்து தண்ணீா் சேகரித்து வைக்கவும். அசுத்தமான தண்ணீரால் பல வித நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com