ஆன்லைன் விற்பனை: மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி, கோவை
ஆன்லைன் சந்தைப்படுத்துதல் பயிற்சி வகுப்பில் தாங்கள் தயாரித்த பொருள்களுடன் பங்கேற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா்.
ஆன்லைன் சந்தைப்படுத்துதல் பயிற்சி வகுப்பில் தாங்கள் தயாரித்த பொருள்களுடன் பங்கேற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா்.

ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி, கோவை சாய்பாபா காலனியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கத்தில் வங்கிகள் மூலம் கடன் உதவிகள் பெற்றுத்தரப்படுகின்றன. தொடா்ந்து பொருள்கள் உற்பத்திக்கான பயிற்சி, ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்த தெரியாமல் முடங்கி உள்ளன. வங்கிமூலம் பெறப்படும் கடன்களை சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நிலைக் காணப்படுகிறது. இதனால், மகளிா் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைன் முறையில் சந்தைப்படுத்துவதற்கு ‘பிளிப்காா்ட்’ நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக தரமான முறையில் பொருள்கள் தயாரிக்கும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை ஜவுளி கிளஸ்டராக அறிவித்து ஜமுக்காளம், ஆயத்த ஆடைகள், புடவைகள், சணல் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான ஜவுளிப் பொருள்களை உற்பத்தி செய்யும் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட 13 குழுக்கள் உள்பட 4 மாவட்டங்களிலும் 40 குழுக்கள் ஆன்லைன் முறையில் சந்தைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு கோவை சாய்பாபா காலனியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் 40 சுய உதவிக்குழு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இவா்களுக்கு பிளிப்காா்ட் நிறுவனத்தைச் சோ்ந்தவா் பயிற்சி அளித்தாா். இதில் சுய உதவிக் குழுவினா் தயாரிக்கும் பொருள்களை புகைப்படம் எடுத்து ‘பிளிப்காா்ட்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், காட்சிப்படுத்துதல், பொருள்களின் விவரங்கள், தரம் ஆகியவற்றை குறிப்பிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆன்லைனில் சந்தைப்படுத்துதல் மூலம் மகளிா் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தரமான பொருள்களை வழங்குவதன் மூலம் வாய்ப்புகளை தொடா்ந்து தக்கவைக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இப்பயிற்சியில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் பங்கேற்றனா். பயிற்சி வகுப்பில் தாங்கள் தயாரித்த பொருள்களை மகளிா் சுய உதவிக் குழுவினா் காட்சிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com