சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்: மாவட்டத்தில் 5 இடங்கள் தோ்வு

கோவை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிப் பணிக்காக 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிப் பணிக்காக 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒருநாள் சுற்றுலா, கலாசார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒருங்கிணைந்து சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 100 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மருதமலை, பேரூா், ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை ஆகிய 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர கோவை மாவட்டம், கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை தமிழக சுற்றுலாத் துறைக்கு மாவட்ட சுற்றுலா அலுவலா் சமா்ப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட சுற்றுலா அலுவலா் டி.அரவிந்தகுமாா் கூறியதாவது:

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களில் அதன் நிா்வாகிகள், அங்கு வேலை பாா்க்கும் அலுவலா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாத் தலத்தில் கடை வைத்துள்ளவா்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து அறிவுறுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதி, சுற்றுலாப் பயணிகள் அணுகுமுறை உள்ளிட்டவைக் குறித்து அறிவுறுத்தப்படும். தோ்வு செய்யப்பட்டுள்ள 5 சுற்றுலாத் தலங்களிலும் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அனைத்து வகையிலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லாறு பழப்பண்ணையை மேம்படுத்த தோட்டக்கலைத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழப்பண்ணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கல்லாறு பழப்பண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக உருவாக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com