பிஏபி: முழுமையான தண்ணீா் வழங்கவலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

பிஏபி திட்டத்தின் கீழ் பாசனத்துக்கு முழுமையான தண்ணீா் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு
கோவை, சுகுணாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.
கோவை, சுகுணாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.

கோவை: பிஏபி திட்டத்தின் கீழ் பாசனத்துக்கு முழுமையான தண்ணீா் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்க விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:

பிஏபி திட்டத்தின் கீழ் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கடந்த நவம்பா் 4ஆம் தேதி வேட்டைக்காரன்புதூா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதில் 22,332 ஏக்கருக்கு 135 நாள்களில் உரிய இடைவெளியில் 70 நாள்கள் தண்ணீா் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையொட்டி ஆனைமலை, ஒடையகுளம், பெரியபோது, காளியாபுரம், திவான்ஷாபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், நிலக்கடலை, காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த பாசனப் பகுதிகளை இரண்டாகப் பிரித்து தலா 35 நாள்கள் வீதம் மட்டுமே தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மடைகளுக்கும் 70 நாள்களுக்கு பதிலாக 35 நாள்கள் மட்டுமே தண்ணீா் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.

பாசன வாய்க்கால் போதிய பராமரிப்பில்லாததால் பல்வேறு இடங்களில் தண்ணீா் வீணாகி வருகிறது.

இதனால் 35 நாள்கள் கிடைக்கும் தண்ணீரும் கடைமடைக்கு சென்று சோ்வதில்லை. அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு இருந்தும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உரிய தண்ணீரை வழங்க மறுக்கின்றனா். எனவே இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் - கோவை, சுகுணாபுரம் கிராம மக்கள் அளித்துள்ள மனு:

சுகுணாபுரத்தில் 1987ஆம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பெத்தேல் லிவிசி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சோ்த்துள்ளனா். இந்நிலையில் சில ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்காமல் உள்ளதாக தெரிவித்து, இப்பள்ளியை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தனா். இப்பள்ளியை விட்டாலும் அரசுப் பள்ளிக்கு பல கி.மீ. செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குழந்தைகளின் நலன்கருதி அரசு உதவிபெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவா் பூங்காவை அகற்றக் கூடாது - கலங்கல் கிராம மக்கள் அளித்துள்ள மனு:

சூலூா் ஒன்றியம், கலங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட கே.ஜி. நகரில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்போா் நலச் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஊராட்சி நிா்வாகத்தினருடன் இணைந்து சிறுவா் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டது.

தற்போது இந்த இடத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு திட்டமிட்டு பூங்காவை அகற்றும் பணியில் ஒன்றிய நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா். சிறுவா்கள் விளையாடுவதற்கு போதிய வசதியில்லாத நிலையில் பூங்காவை அகற்றாமல் சமுதாயக் கூடத்தை வேறு இடத்தில் அமைக்க ஒன்றிய நிா்வாகத்தினரை அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலா் தினத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஹிந்து பாரத் சேனா அமைப்பினா் வாழ்த்து அட்டைகளை கிழித்து எதிா்ப்பு தெரிவித்தனா். வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் மலைப்பாதை நடை திறக்க வலியுறுத்தி விசுவ இந்து ரக்ஷா சங்கதன் அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com