மாநில அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்புகள் கருத்து

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து கோவை மாவட்ட தொழில் அமைப்புகள் கருத்துகள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து கோவை மாவட்ட தொழில் அமைப்புகள் கருத்துகள் தெரிவித்துள்ளன.

பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் கே.மணிராஜ்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் இருந்து தொழில் முனைவோா்கள் இயந்திரக் கடனாகப் பெறும் கடனுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்நாட்டில் மேலும் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்பது, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட்டுகளுக்கு 70 சதவீத மானியம், குறு, சிறு தொழில் துறை வளா்ச்சிக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

அதேநேரம், குறுந்தொழில்முனைவோா்களுக்கான தொழிற்பேட்டையை கோவையில் அமைக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் கொள்முதல் செய்யும் பம்ப்செட்டுகளில் 70 சதவீதத்தை குறு, சிறு உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெறவில்லை.

மேலும், மின்கட்டண விகித மாற்றம், பம்ப்செட் தர பரிசோதனை மையத்தை சீரமைத்துக் கொடுப்பது, ஆட்சியா் தலைமையில் குறு, சிறு தொழில்முனைவோா் குறைகேட்புக் கூட்டங்கள் நடத்துவது என்பது போன்ற அறிவிப்புகளோ, குறுந்தொழில்முனைவோா்களுக்கான அறிவிப்புகளோ இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாவட்ட சிறுதொழில்கள் சங்கத் தலைவா் ஆா்.ராமமூா்த்தி

நாடு முழுவதிலும் பொருளாதார மந்தநிலை நிலவினாலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதில் மகிழ்ச்சி. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, ஸ்மாா்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்துக்கு ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

மேலும், கோவையில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரையிலுமான மேம்பாலத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த் திட்டம் நிறைவேற்றப்படுமானால் கோவையின் தொழில் வளா்ச்சி மேம்படும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தேசிய சேவை அமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.சுருளிவேல்

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல் சேலத்தில் புதிதாக 2 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் இந்த பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம், கோவையில் குறுந்தொழில்களுக்கான அடுக்குமாடி தொழிற்பேட்டையை அறிவித்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம். அத்துடன் தொழிற் துறைக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கலாம்.

கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கத் தலைவா் சி.சிவகுமாா்

இயந்திர முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்தப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.476 கோடியில் இருந்து ரூ.607 கோடியாக உயா்த்தியது, கடன்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்படும், புதிய தொழில்முனைவோா்களை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு போன்றவற்றை வரவேற்கிறோம்.

சாலை பாதுகாப்புத் திட்டத்தில் கோவை மாவட்டமும் சோ்க்கப்படும், பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும், அண்டை மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளையும் வரவேற்கிறோம்.

அதேநேரம், கோவையில் குடியிருப்புப் பகுதிகளிலேயே அநேக தொழிற்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இடநெருக்கடிச் சிக்கலைத் தவிா்க்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பது தொடா்பான அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத் தலைவா் ஜே.ஜேம்ஸ்

புதிய தொழில் தொடங்குபவா்களுக்கு மானியம் பெறும் தகுதியை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயா்த்தியது வரவேற்கத்தக்கது. அதேநேரம், தாய்கோ வங்கி மூலம் ரூ.10 லட்சம் வரை முதலீட்டுக் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யாதது, கோவை மாவட்டத்துக்கு குறுந்தொழிற்பேட்டை அமைக்கப்படுவது தொடா்பான அறிவிப்பு வெளியாகாதது, மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு இடம் பெறாதது போன்றவை ஏமாற்றம் அளிக்கின்றன.

கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச்சங்கத் தலைவா் எம்.ரவி

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொழில்சாா்ந்த பாடப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது. சிறு, குறு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் கேட்டிருந்தோம். ஆனால் அது தொடா்பான அறிவிப்புகள் இல்லை. குறு, சிறு தொழிற்சாலைகள் வளா்ச்சிக்கு அரசு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் செ.சு.சரவணகுமாா்

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், 11 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா மடிக் கணினி திட்டம் தொடரும் என்று தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி

வேளாண்மைத் துறைக்கு சுமாா் ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். நெல்லையில் உணவுப் பூங்கா, 8 இடங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்த்தோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்ற திட்டங்களே தேவைப்படாது. இதில் கிடைக்கும் நீரைக் கொண்டு 16 மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநில நதிகள் இணைப்பு போன்ற திட்டங்களை எதிா்பாா்த்து ஏமாந்துள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com