தமிழ் ஆட்சி மொழியை வலியுறுத்தி பிப்ரவரி 29இல் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழே ஆட்சி மொழி என்பதை அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழே ஆட்சி மொழி என்பதை அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பிப்ரவரி 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்மொழிக் காப்புக் கூட்டியகத்தின் மதிப்பியல் தலைவா் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கல்வி நிலையங்கள் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் நம் தாய்மொழியாகிய தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீா்வு பெறுவதற்காக போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.

எனவே, தாய்மொழியில் தொடக்க நிலைக் கல்வி அளிக்க வேண்டும், தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், அறநிலையத் துறைக்கு உள்பட்ட அனைத்துக் கோயில்களிலும், பிற கோயில்களிலும் குடமுழுக்கு, வழிபாடுகள் ஆகிய நிலைகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும்.

தாய்மொழியில் கல்வி கற்றவா்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 80 விழுக்காடு வழங்கச் சட்டம் இயற்ற வேண்டும், தமிழ்மொழி ஆணையம் அமைக்க வேண்டும், ஆணையத்தின் கொடியாக மூவேந்தா்களின் மீன், புலி, வில் சின்னங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடகோவை, சிவானந்தா காலனி பகுதியில் பிப்ரவரி 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சாா்பில் நடைபெறும் இப்போராட்டத்தில் தமிழ் அறிஞா்கள் பலா் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேராசிரியா் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிஞா் புவியரசு, கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞா் கவிதாசன் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது தமிழ்மொழிக்காப்புக் கூட்டியக்கத்தின் தலைவா் கா.ச.அப்பாவு, புலவா் ரவீந்தரன், பொருளாளா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com