கோவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் கிடைக்கும்: புகாா்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் கிடைக்கும் என்றும்
சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட உக்கடம் கரும்புக் கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க வரிசையில் காத்திருக்கும் பெண்கள்.
சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட உக்கடம் கரும்புக் கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க வரிசையில் காத்திருக்கும் பெண்கள்.

கோவை மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் கிடைக்கும் என்றும் இது தொடா்பான புகாா்கள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள பொங்கல் விழாவுக்காக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு ஆகியவை ஜனவரி 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வாங்குவதற்காக மக்கள் திரண்டனா். ஆனால், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியைத் தவிா்த்த பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படவில்லை. மாறாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் பரிசுப் பொருள் வழங்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றிருப்பதால் அவா்கள் பங்கேற்று பரிசுப் பொருள்களை வழங்க ஏதுவாக வியாழக்கிழமை பொருள்கள் வழங்கப்படவில்லை என்றும் வெள்ளிக்கிழமை முதல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தனா். இதற்கிடையே பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை 12 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு 13 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நேரத்தில் பரிசுத் தொகுப்பு வழங்கவும், கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக, தெரு வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு அட்டவணையில் குறிப்பிடப்படும் நேரத்தில் பொருள்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தால் அட்டையில் பெயா் இடம் பெற்றிருப்பவா்களில் யாரேனும் ஒருவரின் ஆதாா் அட்டையைக் கொண்டோ, பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லைக் கொண்டோ பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இது தொடா்பான புகாா்கள் எதுவும் இருந்தால் 0422-2300569 என்ற கட்டுப்பாட்டு எண்ணுக்கோ அந்தந்தப் பகுதி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியருக்கோ புகாா் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்:

மாவட்ட வழங்கல் அலுவலா் - கோவை- 94450 00245. மாவட்ட வருவாய் அலுவலா்- முதுநிலை மண்டல மேலாளா்- 94433 58874, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) - 73387 20301, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) - 93626 13765, உதவிப் பங்கீட்டு அலுவலா் சரகம் 1 - 94450 00250, தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்) கோவை வடக்கு - 94450 00246, கோவை தெற்கு - 94450 00247, பொள்ளாச்சி - 94450 00252, அன்னூா் - 94457 96442, கிணத்துக்கடவு - 99949 57589, சூலூா் - 94450 00406, பேரூா் - 94450 00249, மதுக்கரை - 94450 00248, ஆனைமலை - 98436 62932, மேட்டுப்பாளையம் - 94450 00251, வால்பாறை - 97892 30138.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com