டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்பு, தந்தையின் மனு தள்ளுபடி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரது

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரது தந்தையின் மனுவைத் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், கோண்டூரைச் சோ்ந்தவா் ரவி மகள் விஷ்ணுபிரியா. இவா், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவா் 2015 செப்டம்பா் 18இல் தனது அலுவலகக் குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தமே தனது மகளின் இறப்புக்கு காரணம் என்று ரவி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையிலும் முன்னேற்றம் இல்லாததால், ரவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கைக் கைவிடுவதாகக் கூறி கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை முடிக்கக்கூடாது என ரவி மனு தாக்கல் செய்தாா். பின்னா் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், இரண்டாவது குற்றப்பத்திரிகையைக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்தது. ஆனால், வழக்கில் சந்தேகமுள்ள 7 பேரிடமும் மறுவிசாரணை நடத்தாமல் பழைய குற்றப்பத்திரிகையையே மீண்டும் தாக்கல் செய்திருப்பதாக ரவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருள்மொழி தெரிவித்தாா். மேலும், இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சந்தேகமுள்ள 7 பேரிடமும் மறுவிசாரணை நடத்தத் தேவையில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதித் துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி அளித்த மனுவை தனிப் புகாராக ஏற்றுக்கொண்டு விசாரிக்க உள்ளதாக உத்தரவிட்டாா். இதன் விசாரணை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது.

இதன்படி கடந்த நவம்பரில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு ஆஜராகி விஷ்ணுபிரியாவின் பெற்றோா் ரவி, கலைச்செல்வி ஆகியோா் வாக்குமூலம் அளித்தனா். இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி, தற்போது சென்னை கூடுதல் எஸ்.பி.யாக பணிபுரியும் சேவியா் பிரான்சிஸ் பெஸ்கி, விஷ்ணுபிரியாவின் தோழியான சென்னையில் உதவி ஆணையராக உள்ள மகேஸ்வரி, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளா் சந்திரலேகா, திருவாரூா் டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி முத்தமிழ் முதல்வன் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா்.

இவற்றைப் பதிவு செய்த நீதித் துறை நடுவா், வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்வதாகவும், டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு:

இதுகுறித்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கூறியதாவது:

கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவா் எனது மகள் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. இந்த வழக்கின் விசாரணையின்போது உயரதிகாரிகள் அளித்த மனு அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டாா். நீதிமன்றத் தீா்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன் வழக்குரைஞா்களுடன் கலந்தாலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தாலும், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்வேன். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்தான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. நீதித் துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com