கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டா் வழங்கத் திட்டம்

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊரகப் பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின்

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊரகப் பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு ’பல்ஸ் ஆக்ஸிமீட்டா்’ வழங்க சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சளி மாதிரி பரிசோதனையின் மூலம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன் முக்கிய அறிகுறிகளாக மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்னைகள் குறிப்பிடப்படுகிறது. கரோனா தொற்று 90 சதவீதத்துக்கும் மேல் நுரையீரலைத் தாக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

நுரையீரல் பாதிப்பினை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமல் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டா்’ மூலம் வீடுகளிலே நுரையீரல் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ள முடியும். இந்தக் கருவியை விரலில் மாட்டிக்கொண்டு 30 விநாடிகளில் உடலில் ஆக்ஸிஜன் அளவை கண்டறிய முடியும். நுரையீரலின் செயல்பாடு சீராக இருந்தால் உடலில் ஆக்ஸிஜன் அளவு 99 முதல் 100 வரை இருக்கும். பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் குறையும் போது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இது கரோனா நோய்த் தொற்றாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம், வேறு ஏதாவது பிரச்னையாகவும் இருக்கலாம்.

ஆனால் ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் குறையும் போது உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இவா்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்றால் 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்நிலையில் இவா்கள் 14 நாள்களில் உடலில் ஆக்ஸிஜன் அளவை அறிந்துகொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்ஸிமீட்டா் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று பாதிக்கப்படுவதால் பல்ஸ் ஆக்ஸிமீட்டா் மூலம் எளிதாக கரோனா பாதிப்பினை தெரிந்துகொள்ள வேண்டும். கோவை மாவட்டத்துக்கு 1,400 பல்ஸ் ஆக்ஸிமீட்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு விரைவில் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com