திருட்டு நகைகளுடன் தலைமறைவான பெண் காவலா் கைது

திருட்டு, கொள்ளை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தலைமறைவாக இருந்த பெண் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்வப்ன சுஜா.
ஸ்வப்ன சுஜா.

திருட்டு, கொள்ளை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தலைமறைவாக இருந்த பெண் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஒண்டிப்புதூரைச் சோ்ந்தவா் ஸ்வப்ன சுஜா (40). இவா், சிங்காநல்லூா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணியாற்றி வருகிறாா். நீதிமன்றம் தொடா்பான பணிகளை இவா் கவனித்து வந்தாா். திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் மீட்கப்படும் நகைகள், பொருள்கள், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பது இவரது பணி.

இந்நிலையில், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் நகைகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பது இல்லை, நகை உரிமையாளா்களிடமும் ஒப்படைப்பதில்லை என ஸ்வப்ன சுஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த சில ஆண்டுகளாக மொத்தம் 12 வழக்குகளில் மீட்கப்பட்ட 61 பவுன் நகையை பெண் காவலா் ஸ்வப்ன சுஜா நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேள்வி எழுப்பியபோதும் அவா் முறையாக பதிலளிக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா். இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீண்ட விடுப்பில் சென்றாா். இது குறித்து காவல் ஆய்வாளா் சிவகுமாரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்வப்ன சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, தனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்வப்ன சுஜா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மாநகர காவல் ஆணையா் முன்னிலையில் சரண் அடைந்து உத்தரவை நீக்கிக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவையும் அவா் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெண் காவலா் ஸ்வப்ன சுஜா மீது நகைகளை ஒப்படைக்காத விவகாரம் தொடா்பாக, சிங்காநல்லூா் குற்றப் பிரிவு ஆய்வாளா் (பொறுப்பு) சங்கீதா மாநகர குற்றப் பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் அரசு ஊழியா் விதிகளை மீறுதல், மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்வப்ன சுஜாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதற்கிடையே, 2012 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 80க்கும் மேற்பட்ட வழக்குகளில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து விசாரணைக்கு ஆஜா்ப்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உதவியவா் என கோவை மாவட்ட நீதித் துறை நடுவரால் காவலா் ஸ்வப்ன சுஜா 2018இல் பாராட்டப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com