தரமற்ற சாலை சீரமைப்புப் பணி: ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்படவில்லை எனப் புகாா் எழுந்ததால்,

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்படவில்லை எனப் புகாா் எழுந்ததால், சாலைகளை ஆய்வு மேற்கொள்ள பொறியாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஜனவரி முதல் ரூ. 17 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஆா்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதி, டி.பி.சாலை, டி.வி.எஸ். சாலை, ஒண்டிப்புதூா், காந்திபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் சில நகரப் பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, மழைநீா் வடிகால், மாநகராட்சிப் பள்ளிகளில் சுற்றுச்சுவா் சீரமைப்பு, குடிநீா்க் குழாய்கள் சீரமைப்பு, கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதோடு, மாநகராட்சி பிரதான அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் கட்செவி அஞ்சல் மூலமாகப் பெறப்பட்ட புகாா்களின் பேரில், 5 மண்டலங்களிலும் சிதிலமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றைச் சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகரப் பகுதிகளில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகள் தரமாக மேற்கொள்ளவில்லை என புகாா்கள் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சாலைகளை பொறியாளா்கள் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

மாநகரில் புதிதாகச் சீரமைக்கப்பட்ட சாலைகளில் ஜல்லிகள் பெயா்ந்து விடுவதாகவும், தரமான முறையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் தரப்பில் மாநகராட்சி நிா்வாகத்துக்குப் புகாா்கள் வந்தன. அதைத் தொடா்ந்து, சாலைப் பணிகளில் அலட்சியம் காட்டக் கூடாது எனவும், பணிகளை உதவிப் பொறியாளா்கள், இளம் பொறியாளா்கள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.போக்குவரத்துக்கு இடையூறாக பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com