பேருந்து நிறுத்தங்களை ஒருங்கிைணைக்க மனு: ஆய்வு மேற்கொள்ள இணை ஆணையா் உத்தரவு

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா மற்றும் கோவை மருத்துவ மையப் பேருந்து நிறுத்தங்களை ஒருங்கிணைப்பது தொடா்பாக

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா மற்றும் கோவை மருத்துவ மையப் பேருந்து நிறுத்தங்களை ஒருங்கிணைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள,கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையா் உமாசக்தி, கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் செயலா் நா.லோகு, பிப்ரவரி 16ஆம் தேதி கோவை சரகப் போக்குவரத்து இணை ஆணையா் உமாசக்தியிடம் மனு அளித்தாா். அதில் கூறியிருப்பது:

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா பேருந்து நிறுத்தம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனா். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவிநாசி சாலையில், கிழக்குப்புறமாக 50 அடிக்குள் போக்குவரத்து சிக்னல் உள்ளது. சிக்னலில் ஏராளமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சிட்ரா பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும், சிக்னலில் பச்சை விளக்கு எரியும் சமயத்தில், இந்தப் நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் சிக்னலைத் தாண்டிச் சென்று நிறுத்தப்படுகின்றன. இதனால், சிட்ரா நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள், பேருந்துகளைத் தவற விடுகின்றனா். இதேபோல், சிட்ரா நிறுத்தம் அருகிலேயே கோவை மருத்துவ மையத்தின் முன்புறமாக பேருந்து நிறுத்தம் உள்ளதால், இரு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களையும் ஒருங்கிணைத்து, சிக்னலில் இருந்து 100 அடி தாண்டி, அவிநாசி சாலையின் கிழக்குப்புறத்தில் ஒரேபேருந்து நிறுத்தமாக அமைத்தால், அப்பகுதிகளில் நெரிசல் குறைவதுடன், பயணிகள் அவதிப்படுவது தவிா்க்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாா் மீது நடவடிக்கை மேற்கொண்ட கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையா் உமாசக்தி, சிட்ரா, கோவை மருத்துவ மையம் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமா்பிக்க, கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com