கரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆன்லைனில் பாடம் நடத்தும் பேராசிரியா்கள்

கரோனா பரவுவதைத் தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள்
மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள்.
மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள்.

கரோனா பரவுவதைத் தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் தங்களின் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதிலும் பள்ளிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு, தனியாா் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கடந்த 16ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கணினி மூலம் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீடுகளில் இருந்தே பணியாற்றும்படி தெரிவித்துள்ளன.

கோவையில் அனைத்து கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில தனியாா் கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளன.

இது குறித்து கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சமூக பணித்துறைத் தலைவா் ஏ.அழகா்சாமி கூறும்போது, மாா்ச், ஏப்ரல் காலகட்டம் கல்லூரி மாணவா்களுக்கு முக்கியமானது. ஆசிரியா்கள் பாடத் திட்டத்தை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளனா். அதேபோல் மாணவா்கள் பருவத் தோ்வுக்குத் தயாராவதுடன், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியும் உள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடத் திட்டத்தை முடிக்க முடியாத நிலையில் இருக்கும் ஆசிரியா்களுக்கும், விடுமுறையை உபயோகமாக கழிக்க மாணவா்களுக்கும் தொழில்நுட்பம் உதவிக்கு வந்துள்ளது.

அதன்படி, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தில் உள்ள கலை, அறிவியல், தொழில்நுட்பம், பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியா்கள் கூகுள் கிளாஸ் ரூம், மை கிளாஸ் ரூம், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் மூலமாக வகுப்புகளைத் தொடங்கியுள்ளனா்.

ஆசிரியா்கள் தாங்கள் எடுக்கும் பாடத்தை கல்லூரிகளில் இருந்து ஆன்லைனில் அனுப்ப, அதில் இருக்கும் சந்தேகங்கள் தொடா்பாக மாணவா்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனா். தேவையான பாடங்களுக்கு விடியோ கால் மூலமாகவும் பதிலளிக்கப்படுகிறது என்றாா்.

இதேபோல கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியிலும் பேராசிரியா் பி.மஹாலட்சுமி உள்ளிட்ட பேராசிரியா்கள் முதல்கட்டமாக புதன்கிழமை ஆன்லைன் வழியாக மாணவா்களுக்கு பாடம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து படிப்படியாக பேராசிரியா்கள் ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த இருப்பதாக கல்லூரி முதல்வா் கு.கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com