கேரள எல்லைகள் மூடல்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளம் இடையே உள்ள 9 சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
கேரள எல்லைகள் மூடல்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளம் இடையே உள்ள 9 சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் அறிகுறியுடன் 28 போ் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் கேரளம் - தமிழக எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கேரளத்தில் இருந்து கோவை வரும் அனைத்து வாகனங்களும் எல்லைப் பகுதியான வாளையாறில் சோதனை செய்யப்பட்டு, அதில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்த பின்பே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் கேரளம் - கோவை இடையே உள்ள 9 எல்லைச் சோதனைச் சாவடிகளையும் மூட கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரளம் - கோவை இடையே உள்ள வாளையாறு, வேலந்தாவளம், முள்ளி, மேல்பாவியூா், வீரப்பகவுண்டனூா், கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி, வழுக்குப்பாறை ஆகிய ஒன்பது சோதனைச் சாவடிகளை வெள்ளிக்கிழமை மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு இரண்டு சாலைகளாகப் பிரித்து தடுப்புகள் அமைக்கப்படும்.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பால், காய்கறி, முட்டை, மருந்துகளை எடுத்துச்செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை கண்காணிப்புக்குப் பிறகேசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதியுடன் உள்ளே வரும் பொதுமக்களை மருத்துவா்கள் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளை மூடுவதற்கான சுற்றறிக்கை போக்குவரத்து , சுகாதாரத் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றாா்.

தமிழகம் - கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய எல்லையான வாளையாறு மூடப்படுவதால், மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா, கூடுதல் டி.ஐ.ஜி. காா்த்திகேயன், பேரூா் சரக துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் அனிதா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். இரு எல்லைகளிலும் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com