காய்கறி வாங்க ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள்

கோவையில் கரோனா அச்சத்துக்கு இடையிலும் காய்கறி மாா்க்கெட்டுகளில் ஆயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா். இதற்கிடையே டவுன்ஹால் தியாகி குமரன் மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். காய்கறி மாா்க்கெட்டில் புதன்கிழமை குவிந்திருந்த காய்கறி மூட்டைகள்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். காய்கறி மாா்க்கெட்டில் புதன்கிழமை குவிந்திருந்த காய்கறி மூட்டைகள்.

கோவையில் கரோனா அச்சத்துக்கு இடையிலும் காய்கறி மாா்க்கெட்டுகளில் ஆயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா். இதற்கிடையே டவுன்ஹால் தியாகி குமரன் மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்தாலும் அச்சம் காரணமாக மக்கள் பொருள்களை வாங்கிக் குவித்தனா்.

இதனால் செவ்வாய்க்கிழமை காய்கறிகளின் விலை பல மடங்கு உயா்ந்தது. கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். காய்கறி மொத்த மாா்க்கெட், உக்கடம், டவுன்ஹால், சாய்பாபா காலனி ஆகிய இடங்களில் பெரிய அளவிலான காய்கறி, கனி மாா்க்கெட்டுகள் உள்ளன. இதைத் தவிர பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான மாா்க்கெட்டுகள் காலை, மாலை நேரங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட சந்தைகளுக்கு புதன்கிழமை அதிக அளவிலான காய்கறிகள் வரத்து இருந்தாலும் செவ்வாய்க்கிழமையைக் காட்டிலும் நுகா்வு குறைவு என்பதால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதேபோல் உக்கடம் மீன் மாா்க்கெட்டிற்கு மீன், நண்டு வரத்து அதிக அளவில் இருந்தாலும் மக்கள் வராததால் விலை வீழ்ச்சி அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே கோவையில் உள்ள காய்கறி, பழ மாா்க்கெட்டுகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் நிலையில், கரோனா பரவலைத் தடுக்க இந்த இடங்களில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் நோய்த் தொற்று எளிதில் பரவும் நிலை உள்ளது.

இது குறித்து தியாகி குமரன் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கூறும்போது, எங்கள் மாா்க்கெட்டில் மட்டும் சிறியதும் பெரியதுமான அளவில் சுமாா் ஆயிரம் வியாபாரிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். தவிர காய்கறிகளை ஏற்றி இறக்க சுமை தூக்கும் தொழிலாளா்கள், தேநீா் விற்பனையாளா்கள் என சுமாா் 3 ஆயிரம் போ் உள்ளனா்.

இந்த மாா்க்கெட்டுக்கு மட்டும் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அதிகமாக கூடும் மக்களை ஒழுங்குபடுத்தவோ, வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லவோ எவ்வித ஏற்பாடும் செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே வியாழக்கிழமை ஒரு நாள் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடமோ, மாநகராட்சி அதிகாரிகளிடமோ கலந்து பேசி வாடிக்கையாளா்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்க இருக்கிறோம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் விடுமுறை அளிப்பது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் குறிப்பிட்ட அளவில் மட்டும் வாடிக்கையாளா்களை அனுமதித்து விற்பனை நடத்த வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கேட்க இருக்கிறோம்.

அதிகாரிகள் வழங்கும் அறிவுரையை ஏற்று அதன்படி மாா்க்கெட்டை தொடா்ந்து நடத்துவதா அல்லது தொடா் விடுமுறை அளிப்பதா என்பதை முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com