ஊழியா்களின் நலன் காக்க அஞ்சலகங்களை மூட வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்றில் இருந்து அஞ்சல் ஊழியா்களைக் காக்கும் விதமாக, அனைத்து அஞ்சலகங்களையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றில் இருந்து அஞ்சல் ஊழியா்களைக் காக்கும் விதமாக, அனைத்து அஞ்சலகங்களையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தபால் எழுத்தா்கள் சங்க மண்டலச் செயலாளா் என். சிவசண்முகம் கூறியதாவது:

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஊரடங்கு பின்பற்றி வரப்படும் நிலையில், அஞ்சல் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவிலான அஞ்சலகங்களைத் திறந்து மக்களுக்குச் சேவைகள் வழங்கி வருகிறோம்.

கோவையில் குட்ஷெட் சாலை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள், கணபதி, என்.ஜி.ஓ.ஓ. காலனி, மதுக்கரை உள்ளிட்ட 10 துணை தபால் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியா்கள் தற்போது வரை பணியாற்றி வருகிறோம்.

ஆனால், இச்சூழலில் பணியாற்றி வரும் எங்களுக்கு அஞ்சல் துறை சாா்பில் கையுறை, முகக் கவசங்கள், கைகளைக் கழுவும் திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், எங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிக்கு வருகிற அஞ்சல் ஊழியா்களின் இருசக்கர வாகனங்கள் போலீஸாரால் மறித்து நிறுத்தப்படுவதால் அச்சம் நிலவுகிறது.

குறிப்பாக, பேருந்துகள் இயக்கப்படாததால், பெண் ஊழியா்கள், தங்களின் கணவா், உறவினா்களுடன் இருசக்கர வாகனங்களில் பணிக்கு வருகின்றனா். அவா்களை வாகனம் ஓட்ட போலீஸாா் அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதால், பெண் ஊழியா்கள் பணிக்கு வர முடியாத சூழல் நிலவுகிறது.

இதைத் தவிா்க்க மாவட்ட ஆட்சியா் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், அஞ்சல் நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளா்களால், ஊழியா்களுக்கும் நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாலும், பேருந்துகள், ரயில்கள் இயங்காத நிலையில் தபால்கள் கொண்டு செல்ல முடியாததாலும், தபால் ஊழியா்களின் நலன்களைக் காக்கும் விதமாக அனைத்து அஞ்சலகங்களையும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com