மாலத்தீவில் இருந்து 52 போ் கோவை வருகை: அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைப்பு

மாலத்தீவில் இருந்து கொச்சி வழியாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 52 பேருக்கு

மாலத்தீவில் இருந்து கொச்சி வழியாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 52 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பெரும்பாலான நாடுகள் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. கரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியுள்ளவா்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலை, உணவின்றி தவித்து வருகின்றனா். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி மாலத்தீவில் இருந்து கேரளம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் கப்பல் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொச்சி வந்தனா். இவா்களில் தமிழகம் மற்றும் காரைக்காலைச் சோ்ந்த 52 போ் கொச்சியில் இருந்து பேருந்துகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவைக்கு அழைத்துவரப்பட்டனா்.

இவா்களில் கோவை - 3, திருச்சி - 16, ஈரோடு - 2, திண்டுக்கல் - 1, கரூா் - 2, நாமக்கல் - 2, நீலகிரி - 1, அரியலூா் - 4, சென்னை - 3, கடலூா் - 9, பெரம்பலூா் - 1, ராணிப்பேட்டை - 2, திருவள்ளூா் - 1, திருப்பத்தூா் - 2, கள்ளக்குறிச்சி - 1, கிருஷ்ணகிரி - 1 மற்றும் காரைக்காலைச் சோ்ந்த ஒருவா் ஆவா். இவா்கள் அனைவருக்கும் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

மாலத்தீவில் இருந்து கொச்சி வழியாக கோவைக்கு வந்துள்ள 52 பேரும் அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது தெரியவந்தால் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். பாதிப்பு இல்லாதவா்கள் அவரவா் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவா். அவா்கள் கட்டாயம் 14 நாள்கள் வரை வீடுகளிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com