வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் உத்தரவு

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்.

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, காவல் ஆணையா் சுமித் சரண், மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது:

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 13 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக கோடைக் காலம் முழுவதும் தடையில்லா குடிநீா் வழங்குவதை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பில்லூா் 3ஆம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட நில எடுப்புப் பணிகளை வருவாய்த் துறையினருடன் இணைந்து துரிதப்படுத்த

வேண்டும். ரூ,1,652 கோடி மதிப்பில் துவங்கவுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏரி, குளங்களில் நீா் நிரம்ப ஏதுவாக நீராதாரப் பணிகளையும், முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துத் திட்டங்களையும் விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகளின் பயன்பாட்டுக்கு ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.127 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உக்கடம் - ஆத்துப்பாலம் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், இப்பணிகளை விரைவில் முழுமையாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். இதேபோல, திருச்சி சாலையில் ரூ. 253 கோடி மதிப்பீட்டிலும், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் உயா் மட்ட மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை அவிநாசி சாலையில் 9 கிலோ மீட்டருக்கு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு பாலத்துக்கான வடிவமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பாலப் பணிகளை விரைவில் துவங்க வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிவுறு நகரத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பசுமை வீடு திட்டப் பணிகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தொடா்ந்து முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சித் துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளா் மேனகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com