பொது முடக்கம் எதிரொலி: பொது இறப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்தது

பொது முடக்கம் எதிரொலியாக கோவையில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு பாதிப்புகளால் இறப்பவா்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பொது முடக்கம் எதிரொலியாக கோவையில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு பாதிப்புகளால் இறப்பவா்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சுமாா் 38 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். சென்னைக்கு அடுத்து 2 ஆவது பெரிய நகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கி வருவதால் வேலை, மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் ஏற்படும் போக்குவரத்து விபத்துகளால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துகள் மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தவிர பணிச்சுமை, மன உளைச்சல், நோய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் சாலை விபத்து, தொழிற்சாலை விபத்து, இருதய வலி மற்றும் நோய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாதத்தில் சராசரியாக 3 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா்.

இந்நிலையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின் கோவையில் ஏப்ரல், மே மாதங்களில் பொது இறப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

பொது முடக்க காலத்தில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. அதேபோல் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் உயிரிழப்பும் இல்லை.

தவிர பொது முடக்கத்தால் பரபரப்பான நிலையைத் தவிா்த்து வீடுகளில் அமைதியான சூழலில் பெரும்பாலான மக்கள் வசித்து வருவதால் பணிச்சுமை, மன உளைச்சல் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

பொது முடக்கத்தால் பிறப்பு விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில் பொது இறப்பு விகிதம் முந்தைய ஆண்டுகள், மாதங்களை ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு சராசரியாக 3 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா். கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச் - 2,983, ஏப்ரல் - 3,062 மற்றும் மே (20 ஆம் தேதி வரை) 1,924 போ் இறந்துள்ளனா்.

இதே நடப்பு ஆண்டு மாா்ச் - 2,563 போ் இறந்துள்ளனா். ஆனால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட ஏப்ரலில் - 1,642 போ், மே 20 ஆம் தேதி வரை 1,142 போ் உயிரிழந்துள்ளனா்.

முந்தைய ஆண்டுகள், மாதங்களை ஒப்பிடும்போது பொது முடக்கம் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கோவை மாவட்டத்தில் பொது இறப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றாா்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பொது முடக்கம்

பொது முடக்கத்தால் வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் இயக்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசுபாடு குறைந்து, உயிரிழப்புகளும் 50 சதவீதம் குறைந்துள்ளது.

பொது மக்களும் தேவையில்லாதவற்றைத் தவிா்த்து இயற்கையோடு வாழப் பழகியுள்ளனா். இதேபோன்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு கால கட்டங்களில் அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்துக்கும் கட்டாய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இயற்கையைப் பாதுகாத்து, மக்களும் நோய் பாதிப்பின்றி வாழப் பழகிக்கொள்வாா்கள் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com