நொய்யல் ஆற்றில் சீரமைப்பு பணிகள்: ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைப்பு
சித்திரைச்சாவடி தடுப்பணை (கோப்பு படம்).
சித்திரைச்சாவடி தடுப்பணை (கோப்பு படம்).

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூா் மாவட்டங்களை கடந்து கரூா் மாவட்டத்தில் நொய்யல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யல் நதியை ஆதாரமாக வைத்து கோவை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நொய்யல் ஆற்றில் நீலி, சித்தரைச்சாவடி, புதுக்குளம், குனியமுத்தூா், கோவை, குறிச்சி, வெள்ளலூா், சிங்காநல்லூா், ஒட்டா்பாளையம், இருகூா், சூலூா், ராசிபாளையம், கரவள்ளி மாதப்பூா், சாமளாபுரம், பள்ளப்பாளையம், செம்மாண்டாம்பாளையம் ஆகிய தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கருங்கல் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் தடுப்பணைகளில் போதிய தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர ஆக்கிரமிப்புகளாலும் நொய்யல் ஆறு சுருங்கி வருகிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரிவாக்கம், புதுப்பித்தல், மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை (நொய்யல் பாசன உபகோட்டம்) செயற்பொறியாளா் செ.க.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:

நொய்யல் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 230 கோடியின் மூலம் சிதிலமடைந்த தடுப்பணைகளில் புதிதாக கான்கிரீட் தளம் அமைத்தல், கசிவுகளை அடைத்து கரைகளைப் பலப்படுத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், எல்லைக்கல் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சித்திரைச்சாவடி, குனியமுத்தூா் ஆகிய வாய்கால்கள்தான் பிரதானம். 2 வாய்க்கால்களிலும் உள்ள 39 மதகுகளும் புதுப்பிக்கப்படவுள்ளன. தவிர நொய்யல் ஆறு மற்றும் வழங்கு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை வீணடிக்காமல் தேக்கி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதன்மூலம் வேளாண் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com