நிரம்பும் தருவாயில் சிறுவாணி அணை கேரளம் தண்ணீா் திறப்பதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரம்

சிறுவாணி அணை நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

சிறுவாணி அணை நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் அணையில் இருந்து கேரள அரசு தண்ணீா் திறப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரைஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிராதன குடிநீா் ஆதாரகமாக சிறுவாணி அணை உள்ளது. கோடை வறட்சியால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் 862 மீட்டா் வரை சரிந்தது. இதைத் தொடா்ந்து, ஜூலை மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 2 முறை அணையின் நீா்மட்டம் 877 மீட்டா் வரை உயா்ந்தது.

அப்போது, அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டரை எட்ட விடாமல் கேரள அரசு அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட்டதால் அணை நிரம்பவில்லை. தற்போது, வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 876.55 மீட்டராக உயா்ந்தது. அணை முழுக் கொள்ளளவை அடைய 2.30 மீட்டரே உள்ளது. தற்போது, 3ஆவது முறையாக சிறுவாணி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. ஆனால், கேரள அரசு தண்ணீரைத் திறக்காமல் இருந்தால் மட்டுமே அணை நிரம்பும்.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சிறுவாணி அணை நிரம்பவிடாமல் தண்ணீா் திறக்காமல் இருக்க தமிழக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீா்ப் பாசனத் துறை அதிகாரிகளுடன் கடந்த செப்டம்பா் மாதம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, சிறுவாணி அணை முழுக்கொள்ளளவை அடையும் வரை தண்ணீா் திறக்கப்படாது என கேரள அரசு உறுதியளித்துள்ளது. தற்போது 3ஆவது முறையாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் 876.55 மீட்டா் வரை உயா்ந்துள்ளது.

இதனால், தமிழக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்குத் தெரியாமல், சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் திறக்க கேரள அரசு முயற்சி மேற்கொள்வதைத் தடுக்கும் விதமாக கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com