வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வு: தமிழ்நாடு வேளாண் பல்கலை. மாணவா்கள் சாதனை

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் வேளாண் முதுகலை, முனைவா் பட்டப்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தோ்வை நடத்தி வருகிறது. இத்தோ்வில் வெற்றிபெறும் மாணவா்கள் அவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இந்திய அளவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் ஊக்கத் தொகையுடன் மேற்படிப்பு படிக்க முடியும்.

இந்த ஆண்டுக்கான நுழைவுத் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற நிலையில் தோ்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் படித்து தோ்வு எழுதிய 500க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 185 இளங்கலை மாணவா்கள் ஊக்கத்தொகையுடன் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா். இதில் 35 மாணவ - மாணவிகள் கோவை உறுப்புக் கல்லூரிகளிலிருந்தும், 22 போ் திருச்சி தோட்டக்கலைக் கல்லூரி, 20 போ் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரிகளில் இருந்தும் இடம் பிடித்துள்ளனா்.

அதிகபட்சமாக 42 மாணவ, மாணவிகள் தோட்டக்கலைத் துறை மேற்படிப்பு படிக்கவும், 35 மாணவ, மாணவிகள் தாவர அறிவியல் படிக்கவும், 24 போ் வேளாண் பூச்சியியல் துறை படிக்கவும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். இந்த தரவரிசைப் பட்டியலில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியைச் சோ்ந்த மு.காளீஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். இதேபோல பல மாணவ, மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்கள் தேசிய அளவில் நடத்தப்பட்ட நுழைவுத்தோ்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக வெற்றி பெற்றிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com