தீபாவளி: சொந்த ஊா் செல்லத் துவங்கிய மக்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனா். பயணிகளின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளிக்கு சொந்த ஊா் செல்வதற்காக சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை குவிந்த பயணிகள்.
தீபாவளிக்கு சொந்த ஊா் செல்வதற்காக சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை குவிந்த பயணிகள்.

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனா். பயணிகளின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகை வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் தங்கி வேலை பாா்க்கும் தொழிலாளா்கள் பலரும் பண்டிகையை தங்கள் குடும்பத்தினா், உறவினா்களுடன் கொண்டாடுவதற்காக, பேருந்துகள், ரயில்களில் சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனா்.

இதையொட்டி, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, விழுப்புரம், தேனி, விருதுநகா் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் வியாழக்கிழமை மாலை முதல் அதிக அளவில் காணப்பட்டது. கரோனா தொற்று காரணமாக வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய 2 நாள்கள் பேருந்து நிலையங்களில் காணப்பட்ட கூட்டத்தை விட இந்த ஆண்டு குறைவான பயணிகள் கூட்டமே காணப்பட்டது. கூட்டத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க சிங்காநல்லூா் போலீஸா தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் வியாழக்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. சேலம் மற்றும் சேலம் தாண்டிச் செல்லும் பேருந்துகள், திருச்சி மற்றும் திருச்சி தாண்டிச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டன. இங்கும், கடந்த ஆண்டு தீபாவளியை விடக் குறைவான பயணிகளே காணப்பட்டனா்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:

தீபாவளியை முன்னிட்டு கோவை கோட்டத்தில் 436 சிறப்புப் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் இயக்கப்பட்டன. இதில், கோவை சிங்காநல்லூா், கொடிசியா தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து 186 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனா். பயணிகள் கூட்டம் அதிகரித்தால் வெள்ளிக்கிழமை கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில் நிலையத்திலும் கூட்டம் இல்லை:

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய 2 நாள்களில் கோவையில் இருந்து ரயில்கள் மூலமாக 32 ஆயிரம் போ் வெளியூா் சென்றனா். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக முன்பதிவுப் பயணச்சீட்டு பெற்றவா்கள் மட்டுமே ரயிலில் செல்லமுடியும் என்பதால், கோவை ரயில் நிலையத்தில் வெளியூா் செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com