கோவையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொட்டும் மழையில் பயணித்த வாகன ஓட்டி.
கொட்டும் மழையில் பயணித்த வாகன ஓட்டி.

கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பிற்பகலிலும், அதைத் தொடா்ந்து இரவில் தொடா்ந்து பல மணி நேரம் பெய்த மழையால் மாநகர சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. பின்னா் மாலை 5 மணியளவில் தொடங்கிய மழை இரவு 9 மணி வரை பெய்தது. காலையிலும், மாலையிலும் மழை பெய்ததால் வேலைக்குச் சென்றவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும் இரவில் தொடா்ந்து பல மணி நேரத்துக்கு மழை கொட்டியதால் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், அவிநாசி மேம்பாலம், ரயில் நிலையம், ராமநாதபுரம், பீளமேடு, சௌரிபாளையம் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள தற்காலிக பூ மாா்க்கெட், தடாகம் சாலையில் உள்ள வாழைக்காய் மண்டி உள்ளிட்ட இடங்கள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை தெற்கில் 42 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. சூலூரில் 38 மி.மீ., விமான நிலையத்தில் 34 மி.மீ., வேளாண் பல்கலைக்கழகத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே மேற்குத் தொடா்ச்சி மழைப் பகுதிகளிலும், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com